×

அடுத்தடுத்து பண்டிகைகளால் அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் விலை உயருமா?: ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சவ் சோப்ரா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு அரசு தயாராக உள்ளது. நாடு முழுவதும், அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போதுள்ள 85 லட்சம் டன் சர்க்கரை இருப்பு, 3 மாதத்திற்கு போதுமானது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 லட்சம் கூடுதலாக 25 லட்சம் டன் சர்க்கரையை அரசு விடுவித்துள்ளது.

கோதுமை சில்லரை விற்பனை விலை சராசரியாக கிலோவுக்கு ரூ.30 என்ற வீதத்தில் நிலையாக இருக்கிறது. பருவமழை பாதிப்பால் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் என்கிற தவறான செய்தியால் 10 சதவீத விலை அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. ஆனாலும் இது தவறான செய்தி. விளைச்சல் நன்றாகவே உள்ளது. பற்றாக்குறை எதுவுமில்லை. சமையல் எண்ணெய் பொறுத்த வரையில் தற்போது 37 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் (27 லட்சம் டன்). எனவே, அதிகப்படியான இருப்பு உள்ளதால், வரவிருக்கும் பருவத்தில் எந்தவிதமான தட்டுப்பாடோ, விலை அதிகரிப்போ இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கோதுமை வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பல கிளை நிறுவனங்களை கொண்ட பெரிய சில்லரை விற்பனையாளர்கள் மீதான இருப்பு வரம்பை 3,000 டன்னிலிருந்து 2,000 டன்னாக ஒன்றிய அரசு நேற்று மேலும் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

The post அடுத்தடுத்து பண்டிகைகளால் அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் விலை உயருமா?: ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Union Govt. New ,Delhi ,Union ,Food Secretary ,Sanjav Chopra ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...